'மறுபடியும்' கட்டுரை எழுதிப் பகிர்ந்து 5நாட்கள் கடந்து போனது.
'மறுபடியும்' கட்டுரையின் தொடரியாக இக்கட்டுரை அமைந்தாலும் இதற்கும் ஒரு தலைப்பு புதிதாகத் தேவைப்பட்டது. 'மறுபடியும் 2' எனத்தலைப்பிட்டால் 'நல்லாவா இருக்கும்? ' எனக்குள் ஒருவன் கேள்வி கேட்கவே இரண்டு மூன்று தலைப்புகள் மண்டைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலைய கம்முனு உட்காருங்கன்னு அலைந்த மூன்றையும் அமரச் சொல்லிவிட்டு கண்களை மூடினேன்.
சிறுபிள்ளைகளிடம் ஒரு விளையாட்டு விளையாடுவோம்.
'டேய் குட்டிப் பையா கண்கள மூடு. உனக்கு ஒண்ணு வாங்கியாந்திருக்கேன். என்னன்னு சொல்லு பார்க்கலாம்?' குட்டிப் பையன் சொல்லும் பதிலில் அப்போதைய அவனது ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் நமக்கு முன் கண் திறக்கும்.
நான் கட்டுரைத் தலைப்பிற்கென கண்கள் மூடித் திறந்தபோது என் எதிரில் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த தினசரித் தேதிகள் மின்விசிறியின் காற்றில் படபடத்தன. அதில் நாளைய தேதி 'அண்ணே வணக்கம்னே' என கண் சிமிட்டியது.
இந்தக் கட்டுரைக்கான தலைப்பும் கிடைத்தது.
நாளைய பொழுது
'மறு+படி+உம்'
பிரித்த பதம் எனக்குப் பிடித்த பதம்.
சொற்களின் பகுப்பு ஒவ்வொன்றும் ஒன்றைச் சொல்கிறது. இதற்கு கோனார் உரையிட அவசியம் இல்லை என நினைக்கிறேன். வாசிப்பவர்களின் மனமே மூன்று பகுப்பிற்குள் உள்ள விஷயங்களை இட்டு நிரப்பி விடும். நிரப்பிக் கொள்ளும் இடம்' 'இதயமா? மூளையா? 'என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.
நான் மூளைக்காரன் இல்லை. இதயத்திலிருந்து சொல்கிறேன்.
'மறுபடியும்' என்பதற்குள் நம்பிக்கையும், உயிர்ப்பும் உறைந்திருப்பதாகவே உணர்கிறேன்.
'மறுபடியும்' இல்லையென்றால் 'நகர்வு' என்பதே இல்லாமற் போகும். உண்மை தானே.
இந்த இடத்தில் மனம் கசந்த நிகழ்வைச் சொல்ல விரும்புகிறேன். கண்ணுறும் பக்கமெல்லாம் அகமதாபாத் விமான விபத்துக் காட்சிகள் 'றெக்கை' கட்டிப் பறந்தன. பறக்கமுடியாமல் தன் சிறகுகளை மூடிக்கொண்ட உலோகப் பறவையின் கோரக் காட்சி அது.
இனி இப்படி ஒன்று நிகழவே கூடாது என மனம் கடவுளிடம் முறையிட கடவுள் ஏன் இதை அனுமதித்தார்? என மனமே எதிர் கேள்வி கேட்கிறது. கடவுள் பதில் தருவாரா?
கடவுள் பதில் தருவது இருக்கட்டும். விமான விபத்து குறித்து வலைப்பகிர்வுகளில் ஒவ்வொருவரும் ஒரு பதில் தருகிறார்கள். ஒவ்வொருவருக்கென்று ஒரு ஊடகம் கைகளில் இருக்கிறது என்பதற்காக பார்வைக்கணக்குகளை மனதில் வைத்து விபத்து தொடர்பாக ஏராளமான பகிர்வுகள்.
ஒரு காலத்தில் செய்திகளை அதன் உண்மைத் தன்மைகளுக்கு அருகாமையில் நின்று அதன் தரவுகளைச் சேகரித்து செய்தித்துறையில் செயலாற்றும் ஊடகங்களே நமக்குத் தந்தன. ஆனால் இன்று நிலைமையே வேறு.
எது பார்வைக்கணக்குகளில் முந்துகிறதோ அது பகிர்வுகளாக பத்துத்தலை ராவணனாக நம் கண்கள் முன் விரியும்.
இன்னும் கொடுமை என்னவென்றால் விபத்துப் பகிர்வுகளைக் கண்ணுற்று அதற்கும் கட்டைவிரல் உயர்த்திப் பதிவை நிலைநிறுத்துவார்கள்.
பத்துப் பகிர்வுகளைக் கண்ணுற்று அதையே கொஞ்சம் மாற்றி பதினோராவதாக ஒன்றைப் பகிர பிறகு நடப்பது தொடர் ஓட்டம் தான். இதயத் துடிப்பு எகிறுகிறது.
விமான இயக்கம் அதன் தொழில் நுட்பம் எதுவுமே தெரியாமல் கண்ணுற்றதை வைத்துக்கொண்டு அது தொடர்பான ஆழம் அறியாமல் ஒன்றைப் பகிர்வது மனஆளுமைக்கு அழகல்ல. அப்படிப் பகிர்பவர்கள் இதை இனியேனும் புரிந்துகொள்வார்களா?
நிகழக் கூடாத விஷயங்கள் இந்த உலகில் எங்கேனும் ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. முடியுமட்டும் முறுக்கேறும் கயிறுகளைப் போல் அல்லாமல் பறக்கும் பறவையின் எடையற்ற உடலைப்போல் மனமதை இலகுவாக்கி தொடர்ந்து நமக்கான பாதையில் சிறகு விரிக்க வேண்டும். பறத்தல் தானே பறவைக்கு அழகு.
மேல் எழுந்த சில நிமிடங்களில் கண்களை விட்டு மறையும் முன் மறைந்து போன உயிர்களின்...??? எப்படி முடிப்பது எனத் தெரியவில்லை.
விபத்து நடந்த அன்று இரவு நான் எனது காணொளியில் ராஜாக்களின் கதைக்கான குறும்பகிர்வைப் பகிர்ந்தேன். மனம் சஞ்சலித்தது. என் மனதை மடை மாற்றவே இதைச் செய்தேன். வருந்துகிறேன்.
உலகில் என்ன நேர்ந்தாலும் மறுநாள் விடியலில் பூக்கள் தன் இதழ்களை விரிக்காமலா இருக்கிறது.
மறுபடியும் தன் பாதைக்குத் திரும்புவது ஒன்றே நாளைய பொழுதுக்கான விடியல். மனதை உறைய வைத்த சம்பவங்களை இந்த உலகம் கண்டுகொண்டே இருக்கிறது. கண்டவைகள் நம் கண்ணெதிரே நாட்கள் கடக்க கடக்க வலுவிழந்த புயலாய் நம்மைக் கடந்து போகும்.
இப்படியான நிகழ்வுகளில் மறுபடியும்
அவரவர் பாதைகளுக்கு அமைதியாகத் திரும்புதலே நாளைய பொழுதிற்கு நல்லது.
விபத்தில் கலைந்த உயிர்களின் வழித்தடங்களில் ஆற்றாமையோடு தேறுதல் இன்றி வாடி நிற்கும் இழந்த உயிர்களின் உறவுகளை நினைக்கையில் கலைந்த உயிர்களின் அந்த நிமிட வேதனைகளை விட உயிர்களை இழந்த உறவுகளின் நிலை சொல்ல வேண்டுமா?
'எல்லாம் கடக்கும்'என்று அவர்களிடம் சொல்ல முடியுமா?
கடவுளிடம் சொல்லலாம். தேறுதல் அடைய அவர்களுக்கு மனசக்தியைத் தாருங்கள். விபத்தில் மரித்த உயிர்களை விண்ணக வீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். பிரார்த்திக்கலாம்.
'மறுபடியும்' கட்டுரையை இலகுவாய் ஆரம்பித்து நீங்கள் எதிர்பாரா வகையில் நாளைய பொழுதாக்கி நம்பிக்கையில் முடிக்கிறேன்.
'நாளை' என்பது நம் கைகளில் இல்லை என்றாலும் நம்பிக்கையில் இருக்கிறது. அன்றைய தின இரவில் கண்கள் மூடி மறுபடியும் நாளை கண்கள் திறப்போம் என்ற நம்பிக்கையில் தான் சுழல்கிறது நம் உலகம்.
அடுத்த பகிர்வு மனப்பறவையின் 100வது பகிர்வு. என்ன எழுதலாம் என யோசிக்கிறேன். இன்று இப்பொழுது எந்த எண்ணமும் இல்லை. நாளை தோன்றலாம்.
100வது பகிர்வில் சந்திக்கலாம்.
வாசித்தமைக்கு நன்றி.
ஒரு மனம் இரு சிறகு
#இருதய். ஆ
No comments:
Post a Comment